Sunday, January 24, 2016


மருதமலை நாட்டை நேர்மையான அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் ஒருநாள், மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.
இரவு நேரம், இளைஞன் ஒருவன் அரண்மனையை நோக்கி வருவதைப் பார்த்தார். ""தம்பி! நீ யார்? இந்த நள்ளிரவு நேரத்தில் அரண்மனைக்கு எதற்காகச் செல்கிறாய்?'' என்று கேட்டார். ""திருடச் செல்கிறேன்,'' என்றான் அவன். "திருடுபவன் எவனாவது உண்மையைச் சொல்வானா? அப்படிச் சொன்னால் சிக்கிக் கொள்ள மாட்டானா,'' என்று கேட்டார் அரசர்.
"திருடனான என்னிடம் எல்லாத் தீய பழக்கங்களும் இருந்தன. என் தாய் என்னைத் திருத்த முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. சாகும் நிலையில் இருந்த அவர் என்னை அழைத்தார். எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று என்னிடம் வாக்குறுதி வாங்கினார்.
அவரின் நினைவாக, அந்த வாக்குறுதியைக் காப்பாற்றி வருகிறேன்,'' என்றான் திருடன். "தம்பி! நீ அரண்மனையில் திருட நான் உதவி செய்கிறேன். கிடைப்பதில் பாதிப் பங்கு எனக்குத் தரவேண்டும்,'' என்றார் அரசர்.
திருடனும் ஒப்புக் கொண்டான்.
அரண்மனைக் கருவூலத்திற்குள் எப்படி நுழைவது என்று சொல்லித் தந்தார் அவர். கருவூலத்திற்குள் சென்ற அவன் இரண்டு வைரங்களுடன் வந்தான். "கருவூலத்தில் மூன்று வைரங்கள் இருந்தன. மூன்றையும் இழந்தால் அரசர் வருந்துவார். அதனால் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு இரண்டை எடுத்து வந்தேன். உம் பங்கிற்கு ஒன்று,'' என்று ஒரு வைரத்தை அரசரிடம் தந்தான்.
மறுநாள் அரியணையில் வீற்றிருந்தார் அரசர். பரபரப்புடன் அங்கே வந்த அமைச்சர். "அரசே! கருவூலத்தில் இருந்த வைரங்கள் மூன்றும் திருடு போய்விட்டன,'' என்றார். "மூன்று வைரங்களுமா திருடு போய்விட்டன?'' என்று கேட்டார் அரசர். "ஆம். அரசே,'' என்றார் அமைச்சர். "திருடன் பொய் சொல்லி இருக்க மாட்டான். எஞ்சிய ஒரு வைரத்தை இவர்தான் திருடி இருக்க வேண்டும்,'' என்று நினைத்தார் அரசர்.
வீரர்களை அழைத்த அவர், "அமைச்சரைச் சோதனை இடுங்கள்,'' என்று கட்டளை இட்டார். வீரர்கள் அவர் இடுப்பில் ஒளித்து வைத்திருந்த வைரத்தை எடுத்தனர். "வீரர்களே! இன்ன இடத்தில் இன்ன பெயருடைய இளைஞன் இருப்பான். அவனை அழைத்து வாருங்கள்,'' என்று கட்டளை இட்டார். அவர்களும் அவனை அழைத்து வந்தனர். அரியணையில் வீற்றிருந்தவரைப் பார்த்தான் திருடன். நேற்றிரவு தன்னைச் சந்தித்தவர் அவர் என்பதை அறிந்தான். என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ என்று நடுங்கினான்.
"அமைச்சரே! இவன் திருடனாக இருந்தும் உண்மை பேசினான். நேர்மையாகவும் நடந்து கொண்டான். நீர் அமைச்சராக இருந்தும் திருடினீர். பொய் சொன்னீர். அதற்காக உம்மைச் சிறையில் அடைக்கிறேன்” என்ற மன்னர், “இளைஞனே! திருட மாட்டேன் என்று வாக்குறுதி கொடு.
உன்னை அமைச்சராக நியமிக்கிறேன்,'' என்றார். "அரசே! வறுமையில் வாடியதால் திருடினேன். இனி திருட மாட்டேன்,'' என்றான் திருடன். அவனை பாராட்டி, அந்நாட்டின் அமைச்சராக நியமித்தார் அரசர்

0 comments:

Post a Comment

Copyright © 2013 தென்றல் | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com