Sunday, January 24, 2016

ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.
அவரைப் பார்த்து,
"குருவே! நான் பெரும் ஏழை.
என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.
நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்" என்று கேட்டான்.
அதற்கு குரு அவனிடம்,
"நான் 5000 தருகிறேன், உன் கைகளை
என்னிடம் வெட்டிக் கொடு" என்று சொன்னார்.
அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான்.
"சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன்,
உன் கால்களை கொடு" என்றார்.
அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை.
"வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன்,
உன் கண்களையாவது கொடு" என்று கேட்டார்.
அதற்கும் அவன் முடியாது என்றான்.
உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன்,
உன் உயிரைக் கொடு என்றார்.
அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள்
சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான்.
அதைக் கேட்ட அந்த குரு அவனிடம்,
"உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும்
இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேறு" என்று கூறினார்.
விலைமதிப்பில்லாத நம் தன்னம்பிக்கை ஒன்று போதும் வாழ்வை ஜெயிக்க...
--இணையத்திலிருந்து
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....
"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,
"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.
"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"
முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"
"ஒருவரிடம் மட்டும்…"
"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"
"$1012347.64"
"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"
"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"
"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"
மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,
"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"
--இணையத்திலிருந்து
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
# இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.
--இணையத்திலிருந்து
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.
--இணையத்திலிருந்து
ஒரு தத்துவஞானி ஆற்றைக் கடப்பதற்காகப் படகில் ஏறினார். படகுக்காரனைப் பார்த்து, ”உனக்குப் பூகோளம் தெரீயுமா?” என்று கேட்டார். “எனக்குப் படகு ஓட்டத்தான் தெரியும், பூகோளம் எல்லாம் தெரியாது” என்றான் படகுக்காரன். வாழ்க்கை ஒரு ரூபாய் என்றால், அதில் கால் ரூபாயை நீ இழந்துவிட்டதாக அர்த்தம் என்றார் தத்துவஞானி. சற்றுத் தூரம் போனவுடன், “சரித்திரம் தெரியுமா” என்று கேட்டார். ” அதுவும் எனக்குத் தெரியாது” என்றான் படகுக்காரன். “அரை ரூபாயை இழந்துவிட்டாய்” என்றார் அவர். பிறகு அவனைப் பார்த்து, “விஞ்ஞானம் தெரியுமா?” எனக் கேட்டார். “அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது அய்யா, எனக்கு படகு ஓட்ட மட்டும் தான் தெரியும்” என்றான் படகுக்காரன். “முக்கால் ரூபாயை இழந்துவிட்டாய்” என்றார் அவர். அப்பொழுது திடீரென்று ஆற்றில் சுழல் ஏற்பட்டு படகு கவிழும் நிலை ஏற்பட்டது.. “சாமி, உங்களுக்கு நீந்தத் தெரியுமா?” என்று படகுக்காரன் கேட்டான். “தெரியாது” என்றார் அந்த தத்துவ ஞானி. “இப்பொழுது உங்கள் உயிரை அல்லவா நீங்கள், இழக்கப் போகிறீர்கள்”, எனக் கூறிய படகுக்காரன் நீரில் குதித்துக் கரை சேர்ந்தான். தத்துவஞானியோ நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிர் துறந்தார்.. நீதி> தத்துவம் உயிரைக் காப்பாத்தாது…!!
--இணையத்திலிருந்து
மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.
அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.
உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.
சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.
உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.
ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.
பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார்.
அதற்கு அந்தத் தவளை "எனக்குக் காது கேட்காது " என்றது.
நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.
இணையத்திலிருந்து
பண்டிட் மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலை க்கழகம் துவங்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்த நேரமது. ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பது சாதாரண விஷயமல்லவே. நன்கொடை வேண்டி பல அரசர்கள், செல்வந்தர்கள், சமூக ஆர்வலர்களை சலிக்காமல் சென்று சந்தித்து அவர் நன்கொடை வேண்டினார். அப்படித்தான் அவர் ஹைதராபாத் நிஜாமிடமும் சென்றார்.
ஹைதராபாத் நிஜாம் இயல்பிலேயே தர்மவான் அல்ல. அதிலும் ஒரு இந்து பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க அவரிடம் மாளவியா நன்கொடை கேட்டதை சிறிதும் நிஜாம் ரசிக்கவில்லை. மாறாக அவருக்குக் கடும்கோபம் தான் வந்தது. தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றி மாளவியா மீது வீசினார். மாளவியா சிறிதும் அமைதி இழக்காமல் நிஜாமிற்கு நன்றி கூறி அந்த ஒற்றைச் செருப்பை எடுத்துக் கொண்டு வெளியேறினார். செருப்பைக் கூட விடாமல் எடுத்துக் கொண்டு மாளவியா வெளியேறியவுடன் நிஜாமிற்கு சந்தேகம் வந்தது. தன் சிப்பாய்களை அவரைப் பின் தொடரச் சொல்லி அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கச் சொன்னார்.
மதன் மோகன் மாளவியா அந்த ஒற்றைச் செருப்புடன் முச்சந்தியில் நின்று, “இது மகாராஜாவின் செருப்பு. இதை ஏலம் விடப் போகிறேன்” என்று அறிவித்தார். கூடிய மக்கள் முதலில் அவர் நகைச்சுவையாக ஏதோ செய்கிறார் என்று நினைத்தாலும் அந்த வேலைப்பாடுடைய செருப்பைப் பார்த்தவுடன் அது மகாராஜாவுடையது தான் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஏலத்தில் உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். மிகக் குறைந்த விலையில் ஆரம்பித்த ஏலம் சிறிது சிறிதாக சூடுபிடிக்க ஆரம்பித்தது.
சிப்பாய்களில் ஒருவன் அவசர அவசரமாக நிஜாமிடம் போய் தகவலைச் சொன்னான். நிஜாமிற்கு தர்மசிந்தனை இல்லா விட்டாலும் சுயகௌரவம் நிறையவே இருந்தது. என்ன விலைக்கு அந்த செருப்பு ஏலம் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்க சிப்பாய் தான் கிளம்பிய போது இருந்த நிலவரத்தைச் சொன்னான். அது போன்ற குறைந்த விலைக்கு அந்தச் செருப்பு ஏலம் போய் வாங்கப்பட்டால் அது தன் நிலைக்கு மகா கேவலம் என்று நினைத்தார் அவர். அதை நல்ல அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் வாங்கி வரச் சொல்லி பெரிய தொகையைக் கொடுத்தனுப்பினார். அந்தப் பெரிய தொகையில் அந்த ஒற்றைச் செருப்பு நிஜாமாலேயே சிப்பாய் மூலம் வாங்கப்பட்டது.
மதன் மோகன் மாளவியா அந்த ஏலத்தொகையை ஹைதராபாத் நிஜாமின் நன்கொடையாக காசி இந்து பல்கலைக்கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.
(1916 ஆம் ஆண்டு காசி இந்து பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.)
மாளவியாவின் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் செருப்பு மேலே விழுவதைக் கௌரவக் குறைவாக நினைத்திருப்பார். கோபப்பட்டிருப்பார். தான் கேவலப்பட்டு விட்டதாக நினைத்திருப்பார். இந்திய அரசியலில் ஒரு முக்கியமான இடத்தை அக்காலத்தில் பெற்றிருந்த மாளவியா அப்படி நினைத்திருந்தால் அது நியாயமாகவே இருந்திருக்கும். ஆனால் ஒரு நல்ல பொதுக் காரியத்திற்காகச் சென்ற இடத்தில் காரியம் தான் பெரிது, வீரியம் பெரிதல்ல என்கிற மனப்பக்குவம் மாளவியாவிற்கு இருந்திருக்கிறது. அதே நேரத்தில் நடந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமும் அவருக்கு இருந்ததால் நல்லபடியாகவே அதை சாதகமாக்கிக் கொண்டு விட்டார்.
பெரிய காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு மதன்மோகன் மாளவியாவின் மனப்பக்குவமும், சமயோசிதமும் மிக முக்கியமாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும், சீக்கிரமாக முடியும். காரியத்தில் கண்ணாய் இருப்பதை விட்டு விட்டு சிறிய சிறிய சுமுகமல்லாத சூழ்நிலைகளையும், பின்னடைவுகளையும் பெரிதுபடுத்தும் தன்மை இருந்தால் கோபமும், விரக்தியும் தான் மிஞ்சும்.
தங்களை முன்னிறுத்தாமல் காரியத்தை முன்னிறுத்தும் மனிதர்களே கடைசியில் பெரும் சாதனைகளை செய்து முடிக்கிறார்கள். சாதனையாளர்களாகத் தாங்களும் சிறப்பு பெறுகிறார்கள். எதிர்மாறாக காரியத்தையும் விடத் தங்களை முன்னிலைப் படுத்தும் மனிதர்களால் காரியமும் நடப்பதில்லை, வெற்றியாளர்களாகப் பிரகாசிக்கவும் முடிவதில்லை.
இணையத்திலிருந்து
Copyright © 2013 தென்றல் | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com